Sri Lakshmi Kuberar Temple, Ravathanallur

ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம், இராவத்தநல்லூர்

தல வரலாறு

தல வரலாறு

ராவத்தநல்லூர் நினைப்பதை நடக்க வைக்கும் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயத்தின் தல வரலாறு

புராண காலத்தில் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டி வந்தது இருவரும் சிவபெருமானிடம் சென்று எங்களில் யார் உயர்ந்தவர் என்று கூறும் படி கேட்டனர் அவர் நான் விஸ்வரூபம் எடுத்த பிறகு என்னுடைய பாதத்தையும் என்னுடைய தலை முடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவரே உயர்ந்தவர் என்று கூறினார், ஆகையால் பிரம்மா அன்ன பறவையாகவும் பெருமாள் கூர்மை அவதாரமாகவும் வடிவம் எடுத்தும் அடி நுனி காண சென்றார்கள் பல காலங்களாகியும் அவருடைய அடியையும் நுனியையும் காண முடியவில்லை பிரம்மா மேல்நோக்கி சென்று கொண்டிருக்கும்போது இடையில் தாழம்பூ ஒன்று மேலிருந்து கீழ் நோக்கி வருவதை கவனித்தார் அதனிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார் நான் சிவனின் தலைமுடியில் இருந்து வருகிறேன் என்று கூறியது எவ்வளவு நாட்களாக வருகிறாய் என்று கேட்டார் நான் பல காலமாக வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியது அதனை கேட்ட பிரம்மா அதிர்ச்சி அடைந்து நாம் தலை முடியை அடைவதற்குள் விஷ்ணு சிவபெருமானின் பாதத்தை தரிசனம் செய்து போட்டியில் வெற்றி பெற்று விடுவார் என்று எண்ணி குறுக்கு வழியில் செல்ல ஓர் உபாயம் செய்தார் தாழம்பூவிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார் நான் சிவபெருமானின் தலைமுடியில் தன்னை கண்டேன் என்று சாட்சி கூறும்படி ஒப்பந்தம் செய்து கொண்டார்

அதன் பிறகு இருவரும் கீழ் நோக்கி வந்தார்கள் அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து நான் தங்கள் தலை முடியை கண்டுவிட்டேன் ஆகையால் உங்கள் விஸ்வரூபத்தை மாற்றிக் கொண்டு சுய ரூபத்திற்கு வருமாறு வேண்டினார்கள் அதே நேரத்தில் விஷ்ணு அவர்கள் சிவபெருமானின் திருவடியை காண முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்த காரணத்தால் சிவபெருமான் விஷ்ணு அவர்களுக்கு தன்னுடைய பாதத்தை தரிசனம் செய்யும் பாக்கியத்தை வழங்கினார் அதே நேரத்தில் தாழம்பூவும் பிரம்மாவும் சிவபெருமானிடம் தங்கள் தலை முடியை தரிசனம் செய்ததாக பொய் உரைத்தார்கள் ஆகையால் சினம் கொண்ட சிவபெருமான் தாழம் பூவிற்கும் பிரம்மாவுக்கும் சாபத்தினை கொடுத்தார் பூலோகத்தில் நடைபெறும் எந்த பூஜைகளிலும் தாழம்பூ ஆகிய உன்னை பயன்படுத்த மாட்டார்கள் என்றும் பிரம்மாவுக்கு பூலோகத்தில் எங்கும் தனி ஆலயம் இருக்காது என்றும் சபித்து விட்டார் அதன் பிறகு சிவபெருமான் யார் மற்றவர்களிடம் பணிவு கொள்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர் ஆவார் என்று அனைவருக்கும் புரிய வைப்பதற்கு இந்த நாடகத்தை நடத்தியதாக கூறினார் பின் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்,

தாங்கள் விஸ்வரூபம் எடுத்த இந்த இடத்தில் தங்களின் உருவம் சிறிய மலை போல் அமையப்பெற்று அதன் அடியில் தாங்கள் எழுந்தருளி தங்களை காண வரும் பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் அந்த இடமே திருவண்ணாமலை ஆகும் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அதன்படியே செய்து அவ்விடத்தில் திருவண்ணாமலை எனும் திருத்தலம் அமைய காணமாயிற்று பின் பிரம்மா தனது தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டு தான் பொய் உரைத்த காரணத்தால் ஏற்பட்ட சாபத்தை நீக்குவதற்கு மாபெரும் யாக குண்டம் ஒன்றை அமைத்து யாகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தார் அவ்விடத்திற்கு பிரம்ம குண்டம் என்று பெயர் வர காரணமாயிற்று யாகத்தில் கலந்து கொள்வதற்காக பிரம்மா அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் அனைத்து தேவர்களும் சிவ கணங்களும் கலந்து கொண்டார்கள் அனைவரும் தங்குவதற்காக தனித்தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது அந்த யாகம் 48 நாட்கள் நடைபெற்றது அதுவரை தேவர்கள் தங்கி இருந்த இடங்களுக்கு அவர்கள் பெயராலே குறிப்பிடப்பட்டது தேவர்கள் தங்கிய இடம் தேவ பாண்டலம் ஆகவும் முக்கனங்கள் தங்கி இடம் முக்கனூர் என்பது பின்னாளில் மூக்கனூர் என்றும் மாறியது குபேரரும் அவருடைய பரிவாரங்களும் தங்கிய இடம் குபேரப்பட்டினம் என்றும் பெருமாள் ஆஞ்சநேயர் தங்கிய இடம் சஞ்சீவிராய பெருமாள் தலம் என்றும் முருகர் மற்றும் விநாயகர் சிவபெருமான் தங்கிய மலை சிவன்மலை என்றும் பெயர் பெற்றது 48 நாட்கள் தொடர்ந்து யாகம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் இரவு என்பதே தெரியாமல் இருந்ததால் அந்த பகுதிக்கு ராவு அற்ற நல்லூர் என்று பெயர் பெற்றது பின்னாளில் அது ராவத்தநல்லூர் என்று அழைக்கப்பட்டது பிரம்மா சிறப்பான முறையில் யாகத்தை நடத்தி சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் அடைந்தார் அவருக்காக ஒரு தனி ஆலயம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என்று வரம் பெற்றார் .

இனி வரும் காலங்களில் திருவண்ணாமலை வந்து கிரிவலம் செய்து தங்களை தரிசனம் செய்யும் பக்தர்கள் நான் ஏற்பாடு செய்து யாகம் நடைபெற்ற இவ்விடத்திற்கு வந்து இங்கு குடி கொண்டிருக்கும் தெய்வங்களை வணங்கி சென்றால் அவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி சர்வ சௌபாக்கியங்களும் பெற்று நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறி நலமோடு வாழ அருள் புரிய வேண்டும் என்ற வரத்தையும் கேட்டு பெற்றார் ஆகையால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் திருவண்ணாமலையில் தங்கள் கிரிவலத்தை முடித்துக் கொண்டு நேராக ராவத்த நல்லூரில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்கினால் நினைத்தது நடக்கும் என்று புராணக் கதைகளில் கூறப்படுவதாக சொல்கிறார்கள் இதுவே ராவத்தநல்லூரில் அருள் புரியும் நினைப்பதை நடக்க வைக்கும் ஸ்ரீ லஷ்மி குபேரர் ஆலயத்தில் தல வரலாறு ஆகும் இவ்வாலயத்தில் வன்னி மரமும் நெல்லி மரமும் தல விருட்சமாகும் இந்த மரங்களை சுற்றி வந்து விளக்கேற்றி தங்களுக்கு வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்ளலாம் அனைவரும் வந்து ஸ்ரீ லட்சுமி குபேரரை தரிசனம் செய்து வேண்டிய வரங்களை பெற்றுச் செல்லுங்கள் நன்றி